Skip to main content

Posts

Showing posts from February, 2015

நின் ஒளியோவியத்துடனான பயணத்தினைக் குறித்து வைக்கிறேன்

எழுத வாய்க்கும் மொழிகள் உதிர்வதும் முத்தத்தின் வாயில் நான் ஒரு புத்தகத்தைப் போல திறந்து கிடப்பதுமான நள்ளிரவின் மீது பயணம் சாத்தியமாகிறது. தட்டுத்தடுமாறி ஜன்னலூடு விழும் பூரணைக் கீறல்கள் பட்டு அருகிலிருக்கும் எதுவுமேயற்ற இருக்கையில் ஒரு கூந்தல் வரையப்படுகிறது. அதில் இரண்டு மயிர்கள் நெளிந்து மீதிப் பெண்ணைச் செய்கின்றன. வாசனையில் திளைத்திருக்கும் கூந்தல் கற்றை கலைந்திருக்குமாறே ஓவியம் உறைந்தும் விடுகிறது. இனி முத்தமிடும் பருவம் அறிந்தேயிராத நின் வாசனையில் கிறங்கிப் பைத்தியம் முற்றிய என் அஞ்சிறைத் தும்பி, இலக்கியத்து வாசனைச் சொற்களத்தனையையும் விழுங்கி, கரடு முரடான இருளில் குதித்து இறந்து போனது. வாசனையென்பது நீயெனப் பொருள் கொண்டது இனி என்றென்றைக்கும் முடிவுறாத நின் முத்தத்தில் களைத்து நின் மீதே வீழ்ந்தபடியிருக்கிறது திரும்பவும் நான். சிலிர்ப்பில் ஓவியத்தின் மறு பக்கம் திரும்பியபடியிருக்கிறது நீயாகிய ஒளி. நானெனப்படுவது நின் மொழி, நானெனப்படுவது நின் முத்தம், நானெனப்படுவது நின் பரவசம். (நன்றி: ஆக்காட்டி இதழ் 04)