Skip to main content

Posts

Showing posts from March, 2016

இரவாகுதல்

என்னை இன்னொன்றாக்கும் வித்தையை இந்த நள்ளிரவு காட்டித்தர மறுப்பதும், ஒன்றாகத் தொடர்ந்திருக்கும் அவதிக்குள் கிடந்து தவிப்பதுமாக உழலுகிறது நானாகிய பாவம். ஞாபகங்களுக்குள் சிக்கியிருக்கும் மற்றொரு நானை விடுவிப்பதில் தோற்றுப்போனதன் வார்த்தைகளை என் மேல் எழுதிவிட்டு ஓட நினைக்கிறது அது. வலிகளால் நிரப்பப்பட்டு இரவின் மீது உருளும் ஞானத்தின் மட்பாத்திரம் நான், மாத்திரமின்றி ஒளியை மட்டுமே கொண்ட இரவினால் துரோகமிழைக்கப்பட்ட காதலியின் கருவிழியுந்தான். இரவுகளுக்கேயுரிய புதிதான இன்னொன்றாகும் மந்திரம் வசப்படாமை குறித்து நான் உன்னிடமே முறைப்படுகிறேன். நீயே என் இரவுகளை மாறி மாறி வர வைக்கும் காதலி. என்னை இருள்வதும் பின் ஒளிர்வதுமாகிய உன் மந்திரமறிந்த இரவாக்கிவிடு.

கனவுகளிலிருந்து விடுபட்ட ஒரு அதிகாலையின் மூன்று சம்பவங்களாக இக்கவிதை இருக்கிறது

ஒன்று: இல்லாதிருத்தலை நட்டுவைத்து கனவுகளின் நிழலினை அருந்தியபடி உறங்கிப் போனேன். பூப்பூவாக நான் பூத்திருக்கிறது காலையில் -கனவுகளிலிருந்தே மதுவுக்கும் ஒரு முத்தத்தின் வழி போதை தொற்றியிருக்க வேண்டும்- இரண்டு: வெற்றிடங்களின் நிழலிலிருந்து அதேயிரவில் அனுப்பப்பட்ட இன்னொரு காதல் குறுஞ்செய்தி எச்சிலேயற்ற இதழ்களின் ஒளிப்படத்துடன் முடிவுறுகிறது. -ஈரமற்றது சுவையில்லாததென கனவு நிராகரிக்கிறது அதை- மூன்று: தூறல் மழையில் என் தோலினுஷ்ணங்கள் கரைந்து விடுமெனவஞ்சியவள்தானே நீ..!! -எனக்கு மொழியில்லை, நானென்பது அர்த்தமே, பின்னர் எங்ஙணம் எனை மொழிபெயர்ப்பாய் யசோதரா?-