Skip to main content

யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்



கவிதை - 01

தொக்கி நிற்கவென இடப்படும் 
மூன்று புள்ளிகளுக்குள்ளிருந்து
முடிவுறாத கவிதையின் அர்த்தங்கள் சிதறுகின்றன

தன் பற்றியெழுதப்படாத கவிதையெனக் 
கோபங்கொண்டு பிடுங்கிய தலைமயிரொன்றால் 
என்னைக் கட்டிவைக்கிறாள் யசோதரா

என் மார்பின் பூனை ரோமங்கள் மொத்தமும்
பாம்பு போல அதனோடு ஒட்டிப் பிணைந்து கொள்கின்றன

பிறகு வழக்கம் போல 
அவளை அதே பெயரறியாத நாணமெனவும்
நான் என்பதை பின்னாலிருந்து அணைக்கும் 
ராட்சதக் காற்றெனவும் 
இரவு பெயரிட்டுக் கொள்கிறது

மூன்று வெவ்வேறு நிறைவுற்ற புள்ளிகள் 
அர்த்தங்களை முடிவிலியென அறிவிக்கும் அபத்தமே
கவிதையெனச் சொல்லி விடுவதினின்றும் 
தலைமயிரின் சுகம் இனிது

நானெனப்படுவது கவிதை;
கவிதையெனப்படுவது உண்மையை மறைப்பது
பின் 
அதில் சுகிப்பது.

இரவின் முடிவில் 
ஒரு பூ வளையமெனத் தன்னை சுற்றியிருக்கச் செய்து
சத்தமாகப் பாட்டிசைக்கிறது நான்

தூய அர்த்தமாகிய யசோதரா
என் இசையில் மெல்லக் கரைந்து 
காற்றெங்கும் அத்தர் போல மணக்கிறாள்


கவிதை - 02

முத்தங்களின்றி வரண்ட காடொன்றினை 
வரைந்து முடித்த வேளை 
தீர்ந்து போன உஷ்ணத்துக்கான நிறங்களை
தன் சிவந்த உதடு கொண்டு 
வரைந்து வைக்கிறாள் யசோதரா

ஓவியத்தில் புத்தமும் துறவும் சூழ்ந்திருந்த 
காடும் மலைகளும் தீப்பற்றி எரிகின்றன

வெறுமையாக விடப்பட்ட இறுதித்தாளின் அமைதியென  
அர்த்தங்கள் துண்டு துண்டாகச் சிதறுகின்றன அப்போது

சொற்களைப்போல அவை எரிந்தெல்லாம் தீர்வதில்லை

கோபம் தீராத யசோதராவின் இடது கழுத்து மடிப்பில் 
ஒரு நதியினளவு இடைவெளியை 
ஒரு ஒற்றைத் தலைமுடி வரைகிறது.

நான் என்பது இனி 
தன்னை நீந்திக்கடக்கும் நதியே தானெனச் சொன்னபடி
முடிவிலி அர்த்தங்களின் மூன்று புள்ளிகளாக விழுகிறது 
கவிதைக்குள்ளிருந்து திடீரெனச் சிறகடித்த 
ஒரு புதுச் சொல்.

Comments

Popular posts from this blog

நபி

  யானைகள் சூழ வந்த பேரிடர் மீது சொண்டில் சுமந்திருந்த சாபத்தின் கூழாங்கற்களைப் போட்டு விடுகிறது சிட்டுக் குருவி வைக்கோல் நார்களென மொத்தமும்  தீப்பற்றியெரிந்தது கண்ட தன் குதூகலத்தை அதே சொண்டினால் காற்றின் மேல் எழுதுகிறது. அப்போது பாடிக்களிக்கும் காற்றுக்குள்ளிருந்து வெளியேறிய காதலனாகிய தெருப்பாடகன் தன் தோற்கருவி கொண்டு இந்தப் பேரண்டத்தின் பெரும் பரவசத்தைக் காற்றெங்கும் அதிரும்படி இசைக்கிறான். அபூதாலிபின் நரை முழுக்க பெருமிதத்தின் வண்ணங்கள் பூசும் அந்தச் செய்தி ஒரு மழை போல கவிதையையும் நனைக்கிறது "நபி பிறந்தார்" காலம் ஏங்கியிருந்த தூதின் முதற் சொல் ஒரு பூவென மலர நிலமெங்கும் குளிர்ந்த கஸ்தூரி வாசம்

குருவிக் குஞ்சுக் கவிதை

நினைவின் இடது கழுத்தோரம் ஒரு குருவியை வரைந்து முடிக்கிறது மேகமூடிய ஒரு குளிர் காலை உதிரும் மஞ்சள் இலைகளில் மோகித்து நிறங்களை உதறித் துறந்தபடி அது மெல்லச் சிறகசைக்கிறது ஆங்காங்கே உதிர்ந்து விழும் பிஞ்சு இறகுகள் முழுக்க கருப்பு வெள்ளையாலான இலையுதிர்காலக் கனவொன்றின் வாசனை. குட்டையாகக் கத்தரிக்கப்பட்ட தலைமுடியுடன் காதோரம் "மீட்டப்பட்ட யாழின் சந்தம் உன் மீது படர்ந்திருக்க வந்திருக்கிறேன்" என்றபடி கவிதை முழுக்கத் தன் சிறகை விரித்தபடி நுழைந்து குருவிக் குஞ்சுக் கவிதையெனத் தன்னிச்சையாகப் பெயரும் சூட்டிக் கொள்கிறது. கவிதைக்குள் நுழையவே முடியாது போன இந்தத் தடவை கடைசி வரியில் கடைசிச் சொல்லென வந்தமர்ந்து ஓய்வெடுக்கிறது நான்.