Skip to main content

Posts

யசோதரா!!!

கோபத்தில் தூக்கியெறியப்பட்ட இரண்டாவது வார்த்தை யசோதராவுடையது. (அது எவ்வாறெனில்...) கத்தரிக்கப்பட்ட இமைகளுக்குள்ளிருந்து கசிந்த புத்தபிரானின் மோகம் பட்டே யசோதராவென்னும் ஓவியம் அசையத்தொடங்குகிறது. (அதனால்) பாதி உலர்ந்த கூந்தலில் சிந்தும் நீர்த்துளி பட்டு விரைக்கிறது ஞானத்தின் குறி. (அதிலிருந்து) நம்மைப் பிரித்து வைத்திருக்கிற மூன்றாவது வெசக் நிலவை நீ சபிக்கிறாய், தைக்கப்படாத துணியால் போர்த்தப்பட்ட என் துறவைச் சபிக்கிறாய், ஆடைகளெதுவுமற்ற முதல்வார்த்தையின் தூய நிர்வாணத்தைச் சபிக்கிறாய், ஒரு வண்டு போல இரைந்து கொண்டிருப்பதாகச் சொன்ன அதன் நீண்ட குறியைச் சபிக்கிறாய், விலக்கப்பட்ட கனியையுண்டதும், தூக்கியெறியப்பட்டதுமான இரண்டு சொற்களும் பிறகு பூமியின் மீது பிணைந்தபடி கிடந்ததைச் சபிக்கிறாய், உன்னை நான் அணைத்தபடியிருந்த ஆற்றோரம் ஒரு குப்பி விளக்குச் சுடருக்குள் தொலைந்து போன புத்தபிரானின் விரகத் துளிகளைச் சபிக்கிறாய்,  (இத்தனைக்கும்) யசோதராவாகிய நின் விழியோரம் தேன் போல கசிந்துறைந்திருப்பது என்னுடைய பரிநிர்வாணத்தின் ஒளி. யசோதரா! நானென்பது உறையும் கழிவு. நீயென்பத...

நின் ஒளியோவியத்துடனான பயணத்தினைக் குறித்து வைக்கிறேன்

எழுத வாய்க்கும் மொழிகள் உதிர்வதும் முத்தத்தின் வாயில் நான் ஒரு புத்தகத்தைப் போல திறந்து கிடப்பதுமான நள்ளிரவின் மீது பயணம் சாத்தியமாகிறது. தட்டுத்தடுமாறி ஜன்னலூடு விழும் பூரணைக் கீறல்கள் பட்டு அருகிலிருக்கும் எதுவுமேயற்ற இருக்கையில் ஒரு கூந்தல் வரையப்படுகிறது. அதில் இரண்டு மயிர்கள் நெளிந்து மீதிப் பெண்ணைச் செய்கின்றன. வாசனையில் திளைத்திருக்கும் கூந்தல் கற்றை கலைந்திருக்குமாறே ஓவியம் உறைந்தும் விடுகிறது. இனி முத்தமிடும் பருவம் அறிந்தேயிராத நின் வாசனையில் கிறங்கிப் பைத்தியம் முற்றிய என் அஞ்சிறைத் தும்பி, இலக்கியத்து வாசனைச் சொற்களத்தனையையும் விழுங்கி, கரடு முரடான இருளில் குதித்து இறந்து போனது. வாசனையென்பது நீயெனப் பொருள் கொண்டது இனி என்றென்றைக்கும் முடிவுறாத நின் முத்தத்தில் களைத்து நின் மீதே வீழ்ந்தபடியிருக்கிறது திரும்பவும் நான். சிலிர்ப்பில் ஓவியத்தின் மறு பக்கம் திரும்பியபடியிருக்கிறது நீயாகிய ஒளி. நானெனப்படுவது நின் மொழி, நானெனப்படுவது நின் முத்தம், நானெனப்படுவது நின் பரவசம். (நன்றி: ஆக்காட்டி இதழ் 04)

ஏதிலியின் நள்ளிரவு கட்டாந்தரையில் புரள்கிறது

தனித்தலைதலின் பானத்தை நான்காவது மிடறு அருந்துகையில் குதிகாலுயரும் ஆழ் முத்தத்தில் நான் நின் சொற்களுக்குள் ஆவியாகிக் கரைந்து போகிறது. அறவே ஈரம் தீர்ந்து சிறு வலியோடு ஒட்டி ஒட்டி விலகும் இறந்த காலத்தின் மடிந்த உதட்டிதழ் என் சொற்களுக்குள்  எச்சில் தேடி வருகிறது. நானென்பது அரபு மெல்லினங்களாலான விடலை அழகியின் கழுத்தோரம் சுரக்கும் ஈரமான முத்தம் இக்கணம். அழகியின் கைக்கிளைக் கனவில் பின்னே பதுங்கிவந்து அணைக்கும் வளைந்த காற்றென இருள் என்னைச் செய்கிறது. இருள் என்பது ஈரம் எனப் பொருள் மாறும் வரை காத்திருந்த ஹூ மெல்ல இறங்கி வந்து ஆண்டாண்டுக்குமாக என்னை அணைத்துக்கொண்டது. பாதித் தூரம் விழுந்திருந்த இலைகளும் திரும்ப மரக்கிளைகளில் போய் ஒட்டி இளமையாகிக்கொண்டன வெட்கத்தில். இனிப் பனி விழும் #ஹூவில் கலத்தலின் இன்பம்.

தலைவர் வாழ்ந்த கவிதை

சாகாவரம் பெற்ற மூன்றே மூன்று சொற்களைப் பிடித்துக்கொண்டு தலைவர் வாழ்ந்த கவிதைக்குள் தட்டுத்தடுமாறி நுழைகிறேன். அவரின் சொற்கள் முழுதும் ஞானிகள் வாழ் இருப்பிடத்து இருள் கவிந்து போயிருக்கிறது பிந்தைய நாட்களில் சிம்மாசனத்துக்கெனப் பயன்பட்ட நான்களின் பலிபீடம், மனச்சாட்சிகளின் இரத்தக்கறை தோய்ந்த அழுக்குத் துணிகளால் மூடி வைக்கப்பட்டிருக்கிறது “யாருமே நிரந்தரமாக வாழ்ந்துவிட முடியாத பாழ் சூழ் இல்லம் அது” என்பதை மட்டும் குறிப்பெடுத்துக் கொள்கிறேன். தலைவர் தேயத் தேயப் பயன்படுத்திய ‘அல்லாஹு அக்பர்’ ‘போராளிகளே புறப்படுங்கள்’ ‘மரம்’ ஆகிய அம்மூன்று சொற்களும் ஒட்டடை படிந்த ஜன்னல்களில்  சாகாவரம் பெற்ற வௌவால்களாகி த்  தலைகீழாகத் தொங்குகின்றன. (பி. கு:  தலைவரின் வௌவால்களுக்கு வாய் மட்டுமே உண்டு) இன்னொரு கவிதையின் சொற்கள் சிலவற்றிலிருந்து அங்கே சிம்மாசனத்தின் மீது புதிதாக இரத்தம் சொட்டிக்கொண்டிருப்பது என்னைக் கிலி கொள்ளச் செய்கிறது. எனக்கு உடனே போகவேண்டும். வௌவால்களோ என்னைச் சிறகுகளால் அழுத்திப் பிடித்துக்கொண்டன. மூன்றில் ஒரு வௌவால் சொன்னது “தவறு தவறாக பிளேடினால் குஞ்சாமணி அறுக்க...