Skip to main content

Posts

Showing posts from 2015

அர்த்தமாகிய பெருங்கனவுக்குள்.. என்று பெயரிடலாமா என்று யோசிக்கிறேன்

என்னிலிருந்து விழும் சொற்கள் உதிர்ந்தேதான் விழுகின்றன என்பதாகவே அதிகம் ஏமாற்றப்படுகிறேன். நானென்பதோ அதிலிருந்து நிர்வாணம் கிடைக்கப்போகிறதென்ற  பெருங்கனவில் அல்லது அர்த்தமென்பது வெளிப்படப் போவதான பேராவலில் ஏமாந்தபடியே திரும்பத் திரும்ப சொற்களை அணிந்து கொண்டும் உடுத்திக் கொண்டும் இருக்கிறது. அதே கனவில் ஆசிரியரென எழுதப்பட்ட சொற்களை உடுத்தியவர்கள் வந்தனர் 1/இறுக மூடியிருக்கும் சொற்களிலிருந்து அர்த்தம் புடைத்திருப்பதாக நம்பவைக்கத் தொடங்கினர் 2/அர்த்தம் என்பதோ விரைத்தாலும் புடைத்து வெளித்தள்ளாத மானமுள்ள அங்கமெனக் கற்பித்தனர் 3/ இறுகிய சொற்கள் கரையும் நதி போன்றவை என பொய்யையே காலம் என்று நம்பப் பணித்தனர் 4/ அர்த்தங்கள் மீது துணுக்குறுவதே 'முழுமையாக விடுதலை பெறுதல்' எனப் பெயரிட்டனர் அர்த்தத்துக்கான கொடும் பசியில் நானோ அறியாது சொற்களைத் தின்னத் தொடங்கினேன். வயிறு நிரம்பிப் புடைத்த போது இன்னமும் தீண்டப்படாத அர்த்தம் என் முன்னால் காலம் என நின்றது. கோபத்தில் கழுத்தில் மிதிபட்ட ஆசிரியனின் வெளித்தள்ளிய நாக்கோடு சேர்த்து பதினைந்து சொற்கள் தரையில் கிடந்தன (என்னையும் ...

நின் முத்தத்தின் சுடர் அதிகாலையெனப் புரிந்து கொள்ளப்படும் பொழுதில் இக்கவிதை எழுதப்படுகிறது

நின் சுடர் பரவும் வெம்மையான பொழுதெனவும் துளித் துளியென உருகிக் கொண்டிருக்கும் பாவத்தின் சொற்களாகவும் எழுதிவிடவா இப்போதினை? அறிந்து கொண்டதன் பாவத்திடம் நினக்கென்று சொற்கள் எங்ஙணம் இருந்திருக்க நியாயம்? அணைத்துக் கொள்ளுதலின் எல்லா விவரணங்களையும் நீயே காற்றில் ஒவ்வொன்றாகப் பரவவிடுகிறாய், நான் பொறுக்கியவற்றை என் ஏழைச் சொற்களில் அடைக்கட்டுமா? நின் தெருக்களில் நான் நினக்கெனவே கலைந்த வேடங்களுடன் அலைந்து திரியும் கோமாளி, என்னைப் பார்த்து சிரிக்கிறாய்தானே? இப்படித்தான் நானெனப்படுவது அசாதாரணமாக நீ முத்தமிடும் ஒவ்வொரு குளிர்காலையிலும் புரியாத கேள்விகளில் தன்னை எழுதிவைத்துவிட்டு இறந்து போகும். நீயோ ஒரு குழந்தையின் தலையைத் தடாவிய பின்னான சொற்களற்ற புன்னகையெனச் சுடர்விடுவாய் வழக்கம் போல அதுவோ அதிகாலையெனப் பெயரிடப்படும்.

புரிய முடியாத கவிதையின் காதலி

என்னுடைய கவிதைகளைப் புரிய முடியாதவளாகவும் கோபம் கொண்டவளாகவும்  இரண்டாயிரத்து நானூற்றிப் பத்தாவது தடவையும் காதலி இருந்தாள். நானும் வழமை போல " எனக்கும்தா ன் "  என்று உண்மையைக் கூறி அவளை  ஆற்றுப்படுத்த விழைந்தேன்.  "என்னுடைய கவிதைகளென  நீயும் நானும் அனைவரும் வாசிப்பவை  நான் ஆகியது என்னைத் தேடியலையும் ஒற்றையடிப்பாதையின் கிளைகளே"  என்றேன். (காதலி தன் கூந்தலைக் கலைத்து நிலத்தில் போட்டாள்,  மழையின் சொற்கள் கவிதையில் தெறித்தன) "கரடு முரடான வனாந்தரத்துக்குள்ளால் வரையப்பட்டிருக்கும்  ஒரு ஏதிலியின் போய்ச்சேருமிடத்துக்கான பாதையின் கடினத்தை   அவன் வேறு யாரிடம் போய் முறையிடுவான் பாவம்"  என்றேன் (அப்போது காதலி தன் இதழ்களை விரித்தாள், காதலின் சொற்கள் கவிதையின் மேல் ஊதா நிறமாகப் படிந்தன) "அவனைப் போக விடுங்கள்" என்றேன் (அதற்குக் காதலி இறுக அணைத்துக் கொண்டாள்,  உஷ்ணமான சொற்கள் கவிதையின் குளிர்ந்த இடைவெளிகளை நிரப்பின) அதைப்பார்த்ததும்  'உன் கவிதையெனப்படுவது என் மேலுள்ள காதல்தான்'...

யசோதரா!!!

கோபத்தில் தூக்கியெறியப்பட்ட இரண்டாவது வார்த்தை யசோதராவுடையது. (அது எவ்வாறெனில்...) கத்தரிக்கப்பட்ட இமைகளுக்குள்ளிருந்து கசிந்த புத்தபிரானின் மோகம் பட்டே யசோதராவென்னும் ஓவியம் அசையத்தொடங்குகிறது. (அதனால்) பாதி உலர்ந்த கூந்தலில் சிந்தும் நீர்த்துளி பட்டு விரைக்கிறது ஞானத்தின் குறி. (அதிலிருந்து) நம்மைப் பிரித்து வைத்திருக்கிற மூன்றாவது வெசக் நிலவை நீ சபிக்கிறாய், தைக்கப்படாத துணியால் போர்த்தப்பட்ட என் துறவைச் சபிக்கிறாய், ஆடைகளெதுவுமற்ற முதல்வார்த்தையின் தூய நிர்வாணத்தைச் சபிக்கிறாய், ஒரு வண்டு போல இரைந்து கொண்டிருப்பதாகச் சொன்ன அதன் நீண்ட குறியைச் சபிக்கிறாய், விலக்கப்பட்ட கனியையுண்டதும், தூக்கியெறியப்பட்டதுமான இரண்டு சொற்களும் பிறகு பூமியின் மீது பிணைந்தபடி கிடந்ததைச் சபிக்கிறாய், உன்னை நான் அணைத்தபடியிருந்த ஆற்றோரம் ஒரு குப்பி விளக்குச் சுடருக்குள் தொலைந்து போன புத்தபிரானின் விரகத் துளிகளைச் சபிக்கிறாய்,  (இத்தனைக்கும்) யசோதராவாகிய நின் விழியோரம் தேன் போல கசிந்துறைந்திருப்பது என்னுடைய பரிநிர்வாணத்தின் ஒளி. யசோதரா! நானென்பது உறையும் கழிவு. நீயென்பத...

நின் ஒளியோவியத்துடனான பயணத்தினைக் குறித்து வைக்கிறேன்

எழுத வாய்க்கும் மொழிகள் உதிர்வதும் முத்தத்தின் வாயில் நான் ஒரு புத்தகத்தைப் போல திறந்து கிடப்பதுமான நள்ளிரவின் மீது பயணம் சாத்தியமாகிறது. தட்டுத்தடுமாறி ஜன்னலூடு விழும் பூரணைக் கீறல்கள் பட்டு அருகிலிருக்கும் எதுவுமேயற்ற இருக்கையில் ஒரு கூந்தல் வரையப்படுகிறது. அதில் இரண்டு மயிர்கள் நெளிந்து மீதிப் பெண்ணைச் செய்கின்றன. வாசனையில் திளைத்திருக்கும் கூந்தல் கற்றை கலைந்திருக்குமாறே ஓவியம் உறைந்தும் விடுகிறது. இனி முத்தமிடும் பருவம் அறிந்தேயிராத நின் வாசனையில் கிறங்கிப் பைத்தியம் முற்றிய என் அஞ்சிறைத் தும்பி, இலக்கியத்து வாசனைச் சொற்களத்தனையையும் விழுங்கி, கரடு முரடான இருளில் குதித்து இறந்து போனது. வாசனையென்பது நீயெனப் பொருள் கொண்டது இனி என்றென்றைக்கும் முடிவுறாத நின் முத்தத்தில் களைத்து நின் மீதே வீழ்ந்தபடியிருக்கிறது திரும்பவும் நான். சிலிர்ப்பில் ஓவியத்தின் மறு பக்கம் திரும்பியபடியிருக்கிறது நீயாகிய ஒளி. நானெனப்படுவது நின் மொழி, நானெனப்படுவது நின் முத்தம், நானெனப்படுவது நின் பரவசம். (நன்றி: ஆக்காட்டி இதழ் 04)