Skip to main content

பால்முலையை மென்றபடியிருக்கிறது பூனைச் சொல்





எதிர்கொண்டு சுமந்து செல்லப் பாரமான சொற்களை 
வழிமுழுக்கத் தவற விடுகிறது கவிதை

மீதமிருக்கும்
அர்த்தங்களெனப்படும் பூனைக் குட்டிகள் கண்களை மூடி
ப் 

பால்குடித்தவண்ணம் 
தாயின் வயிற்றைத் தடாவியபடி படுத்துக்கொள்கின்றன.

கவிதையின் பின்பாதி முழுக்க
சாம்பல் நிற நிழல்

நீண்ட வால் கொண்ட பூனையெனப்படுவதே 
கவிதையென அறிவிக்கப்பட்ட  காலத்திலிருந்து 
வெறுஞ்சொற்கள் வாழுமிடத்து
எனக்கென்ன வேலையெனக் கோபித்து தன்னை விடுவித்துத் தூரம் போகப் புறப்படுகிறது நான்.

விட்டு வெளியேறுதலின் இன்பமென கவிதை இருக்கிறது அப்போது

எதனை எடுத்துச் செல்வது?

ஆயிரம் பகல்களாலும் சுருட்டி முடிக்க முடியாது 
அகல விரிந்து கிடக்கும் காலத்தை 
எங்ஙணம் எடுத்துச் செல்வதென்றறியாது 
இரண்டு ஒளி நாட்களைத் தவறவும் விடுகிறது.

பிறகு
கடுஞ் சொற்களைத் தன் மேல் எறிகிறது.

காலமோ
"எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போகும் நீ எதனை எடுத்துச் செல்ல 
இன்னமும் நிற்கிறாய் ஏழைக் கவிஞா"
என எக்காளத்துடன் சிரிக்கிறது.

"இன்னமும் எழுதிமுடியாத பெருங் கனவை எடுத்...." முடிய முதலே

கவிஞனற்ற ஒன்றுக்குள்ளிருந்து நான்
திரும்பவும் தோற்றுப் போய் மீண்டும்
அழுகிப்போன பழைய சொற்களுக்குள் விழுந்தது.

கவிஞனின் பூனையோ இன்னமும்
கண்களை மூடியபடியே 
பால்முலையை மென்றபடியிருக்கிறது.

பூனையின் கண்களுக்குள் கவிஞன் ஓய்வெடுக்கிறான் போலும்.

Comments

Popular posts from this blog

யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்

கவிதை - 01 தொக்கி   நிற்கவென   இடப்படும்   மூன்று   புள்ளிகளுக்குள்ளிருந்து முடிவுறாத   கவிதையின் அர்த்தங்கள்   சிதறுகின்றன தன்   பற்றியெழுதப்படாத   கவிதையெனக்  கோபங்கொண்டு   பிடுங்கிய  தலைமயிரொன்றால்   என்னைக்   கட்டி வைக்கிறாள்   யசோதரா என்   மார்பின்   பூனை   ரோமங்கள்  மொத்தமும் பாம்பு   போல   அதனோடு   ஒட்டிப்   பிணைந்து  கொள்கின்றன பிறகு   வழக்கம்   போல   அவளை   அதே   பெயரறியாத   நாணமெனவும் நான்   என்பதை   பின்னாலிருந்து  அணைக்கும்   ராட்சதக்   காற்றெனவும்   இரவு   பெயரிட்டுக்   கொள்கிறது மூன்று   வெவ்வேறு   நிறைவுற்ற   புள்ளிகள்   அர்த்தங்களை   முடிவிலியென   அறிவிக்கும்  அபத்தமே கவிதையெனச்   சொல்லி விடுவதினின்றும்   தலைமயிரின்   சுகம்   இனிது நானெனப்படுவது   கவிதை ; கவிதையெனப்படுவது ...

நபி

  யானைகள் சூழ வந்த பேரிடர் மீது சொண்டில் சுமந்திருந்த சாபத்தின் கூழாங்கற்களைப் போட்டு விடுகிறது சிட்டுக் குருவி வைக்கோல் நார்களென மொத்தமும்  தீப்பற்றியெரிந்தது கண்ட தன் குதூகலத்தை அதே சொண்டினால் காற்றின் மேல் எழுதுகிறது. அப்போது பாடிக்களிக்கும் காற்றுக்குள்ளிருந்து வெளியேறிய காதலனாகிய தெருப்பாடகன் தன் தோற்கருவி கொண்டு இந்தப் பேரண்டத்தின் பெரும் பரவசத்தைக் காற்றெங்கும் அதிரும்படி இசைக்கிறான். அபூதாலிபின் நரை முழுக்க பெருமிதத்தின் வண்ணங்கள் பூசும் அந்தச் செய்தி ஒரு மழை போல கவிதையையும் நனைக்கிறது "நபி பிறந்தார்" காலம் ஏங்கியிருந்த தூதின் முதற் சொல் ஒரு பூவென மலர நிலமெங்கும் குளிர்ந்த கஸ்தூரி வாசம்

குருவிக் குஞ்சுக் கவிதை

நினைவின் இடது கழுத்தோரம் ஒரு குருவியை வரைந்து முடிக்கிறது மேகமூடிய ஒரு குளிர் காலை உதிரும் மஞ்சள் இலைகளில் மோகித்து நிறங்களை உதறித் துறந்தபடி அது மெல்லச் சிறகசைக்கிறது ஆங்காங்கே உதிர்ந்து விழும் பிஞ்சு இறகுகள் முழுக்க கருப்பு வெள்ளையாலான இலையுதிர்காலக் கனவொன்றின் வாசனை. குட்டையாகக் கத்தரிக்கப்பட்ட தலைமுடியுடன் காதோரம் "மீட்டப்பட்ட யாழின் சந்தம் உன் மீது படர்ந்திருக்க வந்திருக்கிறேன்" என்றபடி கவிதை முழுக்கத் தன் சிறகை விரித்தபடி நுழைந்து குருவிக் குஞ்சுக் கவிதையெனத் தன்னிச்சையாகப் பெயரும் சூட்டிக் கொள்கிறது. கவிதைக்குள் நுழையவே முடியாது போன இந்தத் தடவை கடைசி வரியில் கடைசிச் சொல்லென வந்தமர்ந்து ஓய்வெடுக்கிறது நான்.