Skip to main content

Posts

Showing posts from 2018

வெள்ளை இரவு

மயிலிறகொன்றிலிருந்து பிரிந்த இந்த வெள்ளை இரவின் ஒளி இருளிலிருந்து நம்மை வெவ்வேறு சொற்களாகப் பிரித்தெடுக்கிறது நீ / நான் / ஞானம் / குற்றம் / பசி என   நாம் பெயர் தரித்துக் கொண்ட இரவில் நீ என்பது எப்போதும் போல   பிடிக்க முடியாத காற்றும் நான் எனப்படுவது கனவுகளின் இருள் சூழ்ந்த தெருக்களில் முப்பதாண்டுகளாக அலைந்து திரியும்   கூடு திரும்பாப் பறவையும் ஞானமென்பது   குற்றம் வழிந்தோடும் மற்றக் கண்ணும் குற்றத்தின் காயமே புதிய ஞானமும்   பசியெனப்படுவதோ தன் தெருப்பாடகனின் இசைக் குறிப்பும் என்பதாக பழஞ் சொற்களின் பரவசத்தில்   தன்னைத் தானே ஆலிங்கணம் செய்தபடி ஆர்ப்பரிக்கிறது கவிதை

நீயெனப்படும் நள்ளிரவின் கடல் நீல நிறம்

நினைவின் மடிப்புகளுக்குள்   வெள்ளை முத்தங்களென எறும்பூரும் இந்த நள்ளிரவின் பெயரென்ன ? உஷ்ணமான ஆயிரம் மென் சொற்களாகி கவிதைக்குள் உறைந்து போன விரகத்தின் சுவை என்ன ? வேரெனப் படர்ந்திருக்கும் இந்தப் பேரழகி இரவின்   சுருள்முடிக் கற்றைகளில் கிறங்கி   சொற்களைத் தவறவிடும் ஏதிலிக்கு கவிதையன்றி போக்கிடமேது ? கேள்விகள் செய்தே தீர்ந்து போன   சொற்களிருந்த இடைவெளிக்குள்ளிருந்து   படபடக்கும் நின் காதல் வெறுங் கவிதையின் மீது   கடல் நீல நிறமெனப்   படிந்து விடுகிறது .  கவிதையே என் திரை , கிரீடமும் அதுவே   என வழக்கம் போல தன் பிரத்தியேக வாத்தியம் கொண்டு இன்னொரு நள்ளிரவின் மீது   பாடலை இசைக்கத் தொடங்குகிறது நான்

யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்

கவிதை - 01 தொக்கி   நிற்கவென   இடப்படும்   மூன்று   புள்ளிகளுக்குள்ளிருந்து முடிவுறாத   கவிதையின் அர்த்தங்கள்   சிதறுகின்றன தன்   பற்றியெழுதப்படாத   கவிதையெனக்  கோபங்கொண்டு   பிடுங்கிய  தலைமயிரொன்றால்   என்னைக்   கட்டி வைக்கிறாள்   யசோதரா என்   மார்பின்   பூனை   ரோமங்கள்  மொத்தமும் பாம்பு   போல   அதனோடு   ஒட்டிப்   பிணைந்து  கொள்கின்றன பிறகு   வழக்கம்   போல   அவளை   அதே   பெயரறியாத   நாணமெனவும் நான்   என்பதை   பின்னாலிருந்து  அணைக்கும்   ராட்சதக்   காற்றெனவும்   இரவு   பெயரிட்டுக்   கொள்கிறது மூன்று   வெவ்வேறு   நிறைவுற்ற   புள்ளிகள்   அர்த்தங்களை   முடிவிலியென   அறிவிக்கும்  அபத்தமே கவிதையெனச்   சொல்லி விடுவதினின்றும்   தலைமயிரின்   சுகம்   இனிது நானெனப்படுவது   கவிதை ; கவிதையெனப்படுவது   உண்மையை  மறைப்பது ,  பின்   அதில்   சுகிப்பது . இரவின்   முடிவில்   ஒரு   பூ   வளையமெனத்   தன்னை  சுற்றியிருக்கச்   செய்து சத்தமாகப்   பாட்டிசைக்கிறது   நான் தூய   அர்த்தமாகிய   யசோதரா என்   இசையில்   மெல்லக்   கரைந்து   காற்ற