Skip to main content

இரவாகுதல்

என்னை இன்னொன்றாக்கும் வித்தையை
இந்த நள்ளிரவு காட்டித்தர மறுப்பதும்,
ஒன்றாகத் தொடர்ந்திருக்கும் அவதிக்குள்
கிடந்து தவிப்பதுமாக
உழலுகிறது நானாகிய பாவம்.

ஞாபகங்களுக்குள் சிக்கியிருக்கும் மற்றொரு நானை விடுவிப்பதில்
தோற்றுப்போனதன் வார்த்தைகளை
என் மேல் எழுதிவிட்டு ஓட நினைக்கிறது அது.

வலிகளால் நிரப்பப்பட்டு இரவின் மீது உருளும்
ஞானத்தின் மட்பாத்திரம் நான்,
மாத்திரமின்றி
ஒளியை மட்டுமே கொண்ட இரவினால்
துரோகமிழைக்கப்பட்ட காதலியின் கருவிழியுந்தான்.

இரவுகளுக்கேயுரிய புதிதான இன்னொன்றாகும் மந்திரம் வசப்படாமை குறித்து
நான் உன்னிடமே முறைப்படுகிறேன்.

நீயே என் இரவுகளை மாறி மாறி வர வைக்கும் காதலி.

என்னை
இருள்வதும் பின் ஒளிர்வதுமாகிய
உன் மந்திரமறிந்த இரவாக்கிவிடு.

Comments

Popular posts from this blog

நபி

  யானைகள் சூழ வந்த பேரிடர் மீது சொண்டில் சுமந்திருந்த சாபத்தின் கூழாங்கற்களைப் போட்டு விடுகிறது சிட்டுக் குருவி வைக்கோல் நார்களென மொத்தமும்  தீப்பற்றியெரிந்தது கண்ட தன் குதூகலத்தை அதே சொண்டினால் காற்றின் மேல் எழுதுகிறது. அப்போது பாடிக்களிக்கும் காற்றுக்குள்ளிருந்து வெளியேறிய காதலனாகிய தெருப்பாடகன் தன் தோற்கருவி கொண்டு இந்தப் பேரண்டத்தின் பெரும் பரவசத்தைக் காற்றெங்கும் அதிரும்படி இசைக்கிறான். அபூதாலிபின் நரை முழுக்க பெருமிதத்தின் வண்ணங்கள் பூசும் அந்தச் செய்தி ஒரு மழை போல கவிதையையும் நனைக்கிறது "நபி பிறந்தார்" காலம் ஏங்கியிருந்த தூதின் முதற் சொல் ஒரு பூவென மலர நிலமெங்கும் குளிர்ந்த கஸ்தூரி வாசம்

யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்

கவிதை - 01 தொக்கி   நிற்கவென   இடப்படும்   மூன்று   புள்ளிகளுக்குள்ளிருந்து முடிவுறாத   கவிதையின் அர்த்தங்கள்   சிதறுகின்றன தன்   பற்றியெழுதப்படாத   கவிதையெனக்  கோபங்கொண்டு   பிடுங்கிய  தலைமயிரொன்றால்   என்னைக்   கட்டி வைக்கிறாள்   யசோதரா என்   மார்பின்   பூனை   ரோமங்கள்  மொத்தமும் பாம்பு   போல   அதனோடு   ஒட்டிப்   பிணைந்து  கொள்கின்றன பிறகு   வழக்கம்   போல   அவளை   அதே   பெயரறியாத   நாணமெனவும் நான்   என்பதை   பின்னாலிருந்து  அணைக்கும்   ராட்சதக்   காற்றெனவும்   இரவு   பெயரிட்டுக்   கொள்கிறது மூன்று   வெவ்வேறு   நிறைவுற்ற   புள்ளிகள்   அர்த்தங்களை   முடிவிலியென   அறிவிக்கும்  அபத்தமே கவிதையெனச்   சொல்லி விடுவதினின்றும்   தலைமயிரின்   சுகம்   இனிது நானெனப்படுவது   கவிதை ; கவிதையெனப்படுவது ...

வெள்ளை இரவு

மயிலிறகொன்றிலிருந்து பிரிந்த இந்த வெள்ளை இரவின் ஒளி இருளிலிருந்து நம்மை வெவ்வேறு சொற்களாகப் பிரித்தெடுக்கிறது நீ / நான் / ஞானம் / குற்றம் / பசி என   நாம் பெயர் தரித்துக் கொண்ட இரவில் நீ என்பது எப்போதும் போல   பிடிக்க முடியாத காற்றும் நான் எனப்படுவது கனவுகளின் இருள் சூழ்ந்த தெருக்களில் முப்பதாண்டுகளாக அலைந்து திரியும்   கூடு திரும்பாப் பறவையும் ஞானமென்பது   குற்றம் வழிந்தோடும் மற்றக் கண்ணும் குற்றத்தின் காயமே புதிய ஞானமும்   பசியெனப்படுவதோ தன் தெருப்பாடகனின் இசைக் குறிப்பும் என்பதாக பழஞ் சொற்களின் பரவசத்தில்   தன்னைத் தானே ஆலிங்கணம் செய்தபடி ஆர்ப்பரிக்கிறது கவிதை