01. இருட்சுவரின் மீதெழுதப்பட்ட
பசியெனப்படும் பெருஞ்சொல்லின் மீதேறி
இந்த நள்ளிரவு தன் தெருப் பாடலை இசைக்கத் தொடங்குகிறது.
நடனமாடலாம்
சத்தமாக ஒரு தோற்கருவியை இசைக்கலாம்
ஒரு சருகிலையைச் சுருட்டிப் புகைக்கலாம்
ஒரு காதல் கவிதையின் கீழுதட்டை மென்றபடி காற்றில் மிதக்கலாம்
என
தனக்கெனத் தெரிந்தெடுக்கவென பசியின் பரவசம்
எதையுமே விட்டு சென்றிருக்கவில்லையென ஏங்கி
தன் மேனி முழுக்க சாம்பல் நிறத்தைத் தீட்டிக் கொண்டது இரவு
02. பசியெனப்படும் பெருஞ்சொல்லை
அதே நிறங்களால் மீளவும் தன் மீது எழுதத் துவங்குகிறது நான்
அப்போது
புத்தக அடுக்கினுள் புழுதி படிந்திருந்த குட்டிப் புத்தரின் மேல்
பாதி நிலவின் ஒளியெனப் படர்கிறது பசி
பழம்புத்தக மடிப்புகளுக்குள் பசி ஒரு
பழுத்த மஞ்சள் நிறத்தின் வாசமென வீசுகிறது
கடந்து செல்ல முடியாத கவிதைக்குள்ளோ
பசி தன்னையோர் மறுகாலால் உணரப்பட்ட
இன்னொரு நதியின் கதகதப்பெனக் குறித்து வைக்கிறது
பசியெனப்படும் பெருஞ்சொல் தனக்கு இனி ஒளியாகும் என்கிறது நான்
Comments